நாடு முழுவதும் அதிகரித்துள்ள ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுப்பதற்காக உணவு எண்ணெயில் வைட்டமின்கள் கலக்கும் திட்டத்தை அரசு பரிசீலித்து வருகிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரியா சுலே கூறுகையில், இந்தத் திட்டம் கடந்த ஆண்டு குஜராத்தில் செயல்படுத்தப்பட்டுப் பெரும் வெற்றியடைந்தது என்றார்.
மேலும், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த இளம் உறுப்பினர்கள் சேர்ந்து குழு ஒன்றை அமைத்துள்ளனர். இக்குழு உடல் நலன், கல்வி, ஊட்டச்சத்து குறைவு, மேம்பாடு போன்ற பொதுநலனைப் பாதிக்கும் திட்டங்களை ஆய்வு செய்து உரிய திட்டக்குழுவின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறது.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அமைச்சர் ரேணுகா சவுத்ரி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி ஆகியோரையும் இக்குழுவினர் சந்தித்து ஊட்டச்சத்து குறைவு சிக்கல் தொடர்பாக விவாதிக்குமாறு வலியுறுத்திள்ளனர்.
இதனடிப்படையில் உணவு எண்ணெயில் வைட்டமின்களைக் கலக்க முடியுமா என்பது குறித்து வல்லுநர்களுடன் அரசு ஆய்வு செய்து வருகிறது. மேலும் அடுத்த முதலமைச்சர்கள் கூட்டத்திலும் இவ்விசயம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது என்று சுலே தெரிவித்தார்.
குடிமக்கள் கூட்டணி என்ற பெயரில் இயங்கிவரும் நாடாளுமன்ற இளம் உறுப்பினர்கள் குழுவினர், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் முறையாகச் செயல்படுகிறதா என்று கண்காணித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் இயங்கிவரும் மகளிர் சுய உதவிக் குழுவினர் அப்பளங்களையும், ஊறுகாய்களையும் மட்டும் தயாரிக்கக் கூடாது. மற்ற சத்துள்ள பொருட்களையும் தேவைக்கேற்ப தயாரிக்க வேண்டும். இதை வலியுறுத்தி மஹாராஷ்டிராவில் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி இயக்கம் ஒன்றைத் தொடங்கவுள்ளோம் என்றும் அவர் கூறினார்.