அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள கவாஜா மொய்னுதீன் சிஸ்தி தர்கா மிகவும் புகழ்பெற்றதாகும். இதில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என சர்வ சமயத்தினரும் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த தர்காவில் நேற்று மாலை 6.12 மணியளவில் திடீரென்று சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. இதில் 3 பேர் பலியானார்கள். 17க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தர்காவை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியின் போது குண்டு வெடித்துள்ளது. அப்போது தர்காவில் 5 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். பலியானவர்களில் ஒருவர் மும்பையை சேர்ந்த முகமது சோயப் என தெரியவந்துள்ளது. அவர் வழிபாடு செய்வதற்காக மும்பையிலிருந்து வந்துள்ளார்.
குண்டுவெடிப்பை தொடர்ந்து தலைநகர் புதுடெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், குண்டுவெடிப்பு தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் பெண் மற்ற 2 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பை, ஒரு தேசப்படம் (மேப்), ஒரு செல்போன், இரும்பு குண்டு சிதறல்கள் ஆகியவற்றை குண்டுவெடிப்பு நடந்த தர்காவிலிருந்து காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே குண்டுவெடிப்பில் பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார்.
படுகாயம் அடைந்த ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் முதல்வரின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் வசுந்தரா ராஜே, பலியான 3 பேரின் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.