நாட்டில் குழந்தை மரணம் குறைந்துள்ளது. ஆனால், ஊட்டச்சத்து குறைவும், இரத்த சோகையும் வேகமாகப் பரவியுள்ளது என்று மத்திய அரசின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தேசியக் குடும்பநல ஆய்வின் (NFHS-3) இறுதியறிக்கை புது டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு விவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 1998-99ல் நடத்தப்பட்ட இரண்டாவது ஆய்வின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது இருந்ததைவிட, நகர்ப்புறங்களில் வசிக்கும் பெரியவர்கள் குறிப்பாகப் பெண்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அதிகமான எடையுடன் உள்ளனர். உடல் பருமனால் அவதிப்படுகின்றனர்.
நாட்டில் 15 முதல் 49 வயதிற்கு உட்பட்டவர்களில் 0.28 விழுக்காட்டினர் எச்.ஐ.வியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களில் 84 விழுக்காட்டினரும், பெண்களில் 61 விழுக்காட்டினரும் மட்டுமே எய்ட்ஸ் நோயைப் பற்றித் தெரிந்துள்ளனர்.
அதேபோல ஆண்களில் 70 விழுக்காட்டினரும், பெண்களில் 36 விழுக்காட்டினரும் மட்டுமே ஆணுறை அணிவதால் எச்.ஐ.வி, எய்ட்ஸ் பாதிக்காமல் தடுக்க முடியும் என்று தெரிந்துள்ளனர்.
மேலும் அரசு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பெரும் முயற்சியால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தில் இருந்து 24.7 லட்சமாகக் குறைந்துள்ளது.
இந்தியப் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கருவுற்றபோதும், பிரசவத்தின்போதும் சரியான கவனிப்பு கிடைப்பதில்லை. இதில் பெரும்பாலானவர்கள் 17 வயதில் திருமணம் ஆனவர்கள்.
திருமணமான பெண்களில் 40 விழுக்காட்டினர் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர்.
முன்பு ஆயிரம் பிறப்புகளுக்கு 68 ஆக இருந்த குழந்தை மரணம் 57ஆகக் குறைந்துள்ளது. 6 மாதம் முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 70 விழுக்காட்டினர் ஊட்டச்சத்துக் குறைவு, ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற பல்வேறு தகவல்கள் இந்த ஆய்வறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய குடும்பநலத்துறை அமைச்சகத்திற்காக மும்பையில் உள்ள மக்கள்தொகை அறிவியல் கல்வி நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது.