இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவாகாரத்தில் இடதுசாரிகளின் எல்லா சந்தேகங்களும் சுமூகமாகத் தீர்க்கப்பட்டுவிடும் என்பதால் நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை என்று மத்திய இரயில்வேஅமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் லாலு ''நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டுள்ள எந்தக் கட்சியும் இடைத்தேர்தல் வரவேண்டும் என்று விரும்பாது. இடதுசாரிகள் எழுப்பியுள்ள எல்லாச் சந்தேகங்களுக்கும் சுமூகமான முறையில் பதில் அளிக்கப்பட்டு இணக்கமான சூழல் உருவாக்கப்படும். எனவே இடைத்தேர்தல் வரும்வாய்ப்பு தொலைவில் கூட இல்லை'' என்று கூறினார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான அரசின்நிலை குறித்து முடிவு எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐ.மு.கூ-இடதுசாரிகள் ஆய்வுக்குழுவில் இவரும் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையை அமெரிக்காவின் காலடியில் அடகு வைக்கும் சூழல் உருவாகும் என்று இடதுசாரிகள் கூறியுள்ளது பற்றிக் கேட்டதற்கு, ''இந்த ஒப்பந்தம் முற்றிலும் மின் உற்பத்திசார்ந்தது. நம்மை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் வாய்ப்பு இங்கில்லை'' என்று லாலு தெரிவித்தார்.
மேலும், ''கடந்த சில அண்டுகளுக்கு முன்பு 'புஷ்ஷை நீக்குங்கள் உலகத்தைக் காப்பாற்றுங்கள், பா.ஜ.கவை நீக்குங்கள் நாட்டைக் காப்பாற்றுங்கள்' என்ற முழக்கத்தோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பேரணி நடத்தியவன் நான். அப்படியிருக்கையில் இப்போது எப்படி நான் ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பேன்'' என்று அவர் கேள்வி எழுப்பினார்.