சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் முகமது எல்பராடி இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். அப்போது அணுசக்தி ஒப்பந்தச் சிக்கல் பற்றி விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நாட்டில் எரிசக்தித் தேவை அதிகரித்துவரும் சூழ்நிலையில் அணுசக்தி அதை நிறைவு செய்யும் என்ற வகையில், அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொள்ள விரும்பும் அணுசக்தி ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவது முக்கியமானது என்று காங்கிரஸ் கருதுகிறது.
அதற்கு உதவுவதாக அமெரிக்கா கூறியுள்ள சூழலில், இந்தியாவிற்குச் சாதகமான கருத்துக்களை சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் எல்பராடி கூறியுள்ளார்.
இந்நிலையில், சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் முகமது எல்பராடி 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்றிரவு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக விரிவாக விவாதித்தார்.