இந்தியாவுடன் கண்காணிப்பு ஒப்பந்தம் செய்து கொள்வது பற்றி பேச்சு நடத்த எந்தக் காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் முகமது எல்பராடி கூறினார்.
மேலும், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவில் நடைபெற்றுவரும் அரசியல் விவாதங்கள் அனைத்தும் முடியும்வரை அணுசக்தி முகமை காத்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எதையும் எடுக்கக் கூடாது என்று இடதுசாரிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் முகமது எல்பராடி 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
மும்பையில் பாபா அணுஆராய்ச்சி மையத்தில் மூத்த அணு விஞ்ஞானிகளோடு கலந்துரையாடிய எல்பராடி நேற்றிரவு டெல்லி சென்றார்.
அங்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக விரிவாக விவாதித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எல்பராடி, '' இந்தியா அமெரிக்கா இடையிலான 123 ஒப்பந்தம் பற்றி முகர்ஜி விளக்கினார்'' என்றார்.
மேலும், அணு வணிகம் தொடர்பாக 45 நாடுகள் அடங்கிய அணுஎரிபொருள் வழங்கும் நாடுகள் குழு விதித்துள்ள தடைகளில் இருந்து இந்தியா வெளிவர முயற்சிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அணு எரிபொருள் வழங்குபவராகவும், பெறுபவராகவும் இந்தியா இயங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தை இடதுசாரிகள் எதிர்த்துவருவதால் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்துக் கேட்டதற்கு, இந்தியாவுடன் கண்காணிப்பு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு எந்தக் காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை என்றார்.
சர்வதேச அணுசக்தி முகமையை இந்தியா எப்போது அணுகும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தாரா என்று கேட்டதற்கு, இது போன்ற கேள்வியை நான் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கேட்கவில்லை என்றார்.
இதற்கிடையில் பிரதமர் மன்மோகன் சிங்கை எல்பராடி இன்று சந்திக்கவுள்ளார்.