Publish Date: Wed, 10 Oct 2007 (14:17 IST)
Updated Date: Wed, 10 Oct 2007 (14:16 IST)
வெளிவரவிருக்கும் ஊடகங்களின் பெயரில் அரசு அடையாள அட்டை வேண்டுமானால் 500 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கும் சுவரொட்டிகளை கொல்கத்தா நகரக் கல்லூரிகளின் சுவர்களில் காணமுடிவது அதிர்ச்சியை அளித்துள்ளது.
நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, கொல்கத்தா நகரக் கல்லூரி மாணவர்கள் பலர் அரசு ஊடக போலி அடையாள அட்டையுடன் வலம்வருவது உண்மை.
வெளிவரவிருக்கும் தொலைக்காட்சி அலைவரிசை ''சுவிதா'' , வெளிவரவிருக்கும் நாளிதழ் ''இந்தியா டிவி நியூஸ்'' ஆகியவற்றில் செய்தியாளராகப் பணிபுரிய அடையாள அட்டை வேண்டுமானால் 500 ரூபாய் செலுத்தி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கும் சுவரொட்டிகள் நகரெங்கும் உள்ளன.
அண்மையில் அருண்குமார் லூனியா என்ற இளைஞரை விசாரித்தபோது அவரிடம் போலி அடையாள அட்டை இருந்தது.
அந்த ஊடக அட்டையின் இருபுறமும், "Information and Broadcasting Ministry, Government of India, and Press Information Bureau, Licensing Branch, Kolkata" என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன. அந்த அட்டை வாழ்நாள் முழுவதும் செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
லூனியாவை மேலும் விசாரிக்கையில், அந்த அட்டைக்கான எல்லா ஆதாரங்களும் இருப்பதாகத் தெரிவித்து அவற்றைச் சமர்ப்பித்தார். மேலும், இந்தக் குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டேன் என்று அவர் உறுதியளித்தார்.
இதுகுறித்து உள்துறைச் செயலர் பிரசாத் ரஞ்சன் ராயிடம் கேட்டதற்கு, ''இது ஒரு மோசடி, குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
மேலும், அரசின் ஊடக தகவல் மையத்தைத் (Press Information Bureau) தவிர வேறு யாருக்கும் ஊடக அடையாள அட்டைகளை வழங்கும் அதிகாரம் இல்லை என்றும், PIBக்கு உரிமம் பெற்ற கிளைகள் இல்லை என்றும் PIB செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
PIB அங்கீகரித்த செய்தியாளர்களைத் தவிர வேறு யாருடைய அடையாள அட்டையிலும் PIB அல்லது தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் பெயர் இருக்காது என்று மேற்கு வங்க மாநில ஊடக அடையாள அட்டை அங்கீகாரக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கும் மேலாக, செய்தியாளர் என்பவர் செய்தித்துறையில் 3 ஆண்டுகள் அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட இதழ்கள், தொலைக்காட்சி, வானொலி ஆகிய நிறுவனங்களின் வழியாக விண்ணப்பித்தால் மட்டுமே அரசு ஊடக அடையாள அட்டையை வழங்கும்.
அந்த அட்டையும் ஓராண்டுக்கு மட்டுமே செல்லும். அதற்குப் பிறகு மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
Webdunia
Publish Date: Wed, 10 Oct 2007 (14:17 IST)
Updated Date: Wed, 10 Oct 2007 (14:16 IST)