கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைக்க வேணடும் என்ற கர்நாடக ஆளுநர் ராமேஷ்வர் தாகூரின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
இந்த முடிவு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு அளித்து வந்த ஆதரவை, பாரதிய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டது. இந்த இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, பாரதிய ஜனதா கட்சியிடம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியை ஒப்படைக்கவில்லை.
இதனால் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, பாரதிய ஜனதா விலக்கிக் கொண்டது. இதன் காரணமாக பெரும்பான்மை இழந்ததால் குமாரசாமி நேற்று ஆளுநடரிடம் பதவி விலகல் கடிதம் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அறிவிக்குமாறு, ஆளுநர் ராமேஷ்வர் தாகூர், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு பரிந்துரைத்தார்.
இது பற்றி விவாதிப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று இரவிற்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.