சர்வதேச அணுசக்தி முகமையுடன் பாதுகாப்பு உடன்பாடு குறித்த பேச்சு வார்த்தை இந்தியா விரும்பும் போது நடத்தப்படும் என்று சர்வதேச் அணுசக்தி முகமையின் தலைவர் முகம்மது எல்பராடி கூறினார்.
சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் முகம்மது எல்பராடி, முன்று நாள் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் இடதுசாரி கட்சிகள், இவரின் சுற்றுப்பயணத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
மும்பையில் புற்று நோயை குணப்படுத்தும் கணினியில் இயங்கும் டெலிகோபால்ட் சாதனம் பபாட்ரான் II -ஐ தொடங்கி வைக்க வந்த எல்பராடியிடம், நீங்கள் இந்தியாவில் இருக்கும் போது, அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்று கேட்டதற்கு, இந்தியா விரும்பும் போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இது தொடர்பாக அவர்கள் வியன்னாவிற்கு வந்து அதிகாரபூர்வமாக கேட்டுக் கொள்ளும் வரை நாங்கள் காத்திருப்போம் என்று தெரிவித்தார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், இடது சாரிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையால், அவருக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பயன்மிக்கதாக இருந்ததா என்று கேட்டதற்கு, இந்திய அரடசுடன் நான் எப்போதுமே பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். இது எதிர்காலத்திலும் தொடரும் என்று பதிலளித்தார்.