ஐக்கிய முற்போக்கு - இடதுசாரி கூட்டணிக் கட்சிகளின் குழு கூட்டத்தில், சர்வதேச அணுசக்தி முகமையுடன் மத்திய அரசு அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தக்கூடாது என்று அரசை சம்மதிக்க வைத்தன.
இருதரப்பிற்கும் இடையே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், சர்வதேச அணுசக்தி முகமையுடன் உடன்பாடிற்கான பேச்சுவார்த்தை ஆகியவை பற்றி சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் செய்தியாளர்களிடம், இந்த குழு இறுதி முடிவு எடுக்கும் வரை, சர்வதேச அணுசக்தி முகமையுடன் எந்த பேச்சுவார்த்தையும் தொடங்காது. எங்கள் பேச்சுவார்த்தை தொடர்கிறது. இது முடிவதற்குள் எவ்வித நடவடிக்கையும் இருக்காது என்று நினைக்கின்றேன் என்றார்.
இநத கூட்டத்தின் தலைவரும், அயலுறவு அமைச்சருமான பிரணாப் முகர்ஜி கூறுகையில், இந்தக் குழுவின் அடுத்த கூட்டம் வரும் 22 ஆம் தேதி நடக்கும். இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் குறித்து பல்வேறு விஷயங்களில் உள்ள சந்தேதங்களை குழு உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர். அணுசக்தி ஒப்பந்ததால் அயலுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு உடன்பாடுகளில் ஏற்படும் தாக்கத்தை பற்றி விவாதித்தனர் என்று அவர் கூறினார்.
இந்தக் குழுவின் மற்றொரு உறுப்பினரும், ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், மத்திய அரசு கவிழாது, இடைத் தேர்தல் இல்லை என்று அறிவித்தார்.