இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய முற்போக்கு - இடதுசாரி கூட்டணிகளின் குழுக் கூட்டத்தில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இரு கட்சி தலைவர்களும் பகிரங்கமாக கருத்து மோதலில் ஈடுபட்டதால், அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு, மக்களவைக்கு இடைத்தேர்தல் வரலாம் என்ற பரவலான கருத்து ஏற்பட்டது.
சோனியா காந்தி, இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்ததை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரிகள் என்று பகிரங்கமாக கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நான்கு இடதுசாரி கட்சித் தலைவர்களும் கூட்டாக பதிலளித்தனர். அத்துடன் நாட்டின் மீது காங்கிரஸ் தேர்தலை திணிக்கிறது என்று குற்றம் சாட்டினார்கள்.
இந்த சூழ்நிலையில் இன்று ஐ.மு. - இடதுசாரிகள் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் வெளியுறவுத்துறை அமைச்சரும், ஆய்வுக் குழுவின் தலைவருமான பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் குழுவில் இடம் பெற்றுள்ள 15 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதில் இருதரப்பினரும் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட விசயங்கள் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் இந்திய அமெரிக்க இராணுவக் கூட்டுப்பயிற்சி ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள், உலகாளாவிய அளவில் அமெரிக்க நலன் சார்ந்த கொள்கைகளுடன் சமரசம் செய்துகொள்ளாது என்று அரசு உறுதியளிக்குமா என்று இடதுசாரிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இடதுசாரிக் கட்சிகளின் இந்த கேள்விக்கு மத்திய அரசு தனது பதிலை அனுப்பிவிட்டது.
சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவருடன் பேச்சு நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்துவிட்ட நிலையில், இன்று கூட்டம் நடந்தது. இதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இன்று நடந்த கூட்டம் பற்றியும், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக இடதுசாரி கட்சித் தலைவர்கள் இன்று மாலை தங்களுக்குள் ஆலோசனை நடத்துகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய 4 இடதுசாரிக் கட்சிகளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வாரத் தொடக்கத்தில் மீண்டும் ஆய்வுக் குழு கூடி விவாதிக்கவுள்ளது. அதில் இடதுசாரிகள் நிலையான ஒரு இறுதி முடிவை எடுப்பார்கள் என்று கருதப்படுகிறது.