காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளும் கொடுத்துவரும் நெருக்கடிக்கு இடையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று மாலை பதவி விலகுவேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 20 மாதங்களுக்கு முன்பு செய்த ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தை பா.ஜ.க விடம் ஒப்படைக்க மதசார்பற்ற ஜனதா தளம் மறுத்துவிட்டது. எனவே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க விலக்கிக் கொண்டது.
இந்த நெருக்கடியான சூழலில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தள ஆரசுக்கு ஆதரவளிக்க முடியாது என்று பா.ஜ.க, காங்கிரசு கட்சிகள் ஆளுநரிடம் கடிதங்கள் மூலம் தெரிவித்துள்ளன.
மேலும் கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதா தள அரசைக் கலைத்து விட்டுத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் முதல்வர் குமாரசாமி இன்று மதியம் ஆளுநரைச் சந்தித்தார். இச்சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி, "இன்று மாலை 5.30 மணியளவில் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. பின்னர் பதவி விலகல் அறிவிப்பை வெளியிடுவேன்" என்று தெரிவித்தார்.
கர்நாடக சட்டசபையில் பாஜகவிற்கு 79 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 65 உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 58 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.