குஜராத்தில் நடைபெற்ற 21 போலி என்கவுன்டர்கள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் பி.ஜி. வர்கீஸ் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய அரசு, குஜராத் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
2003 முதல் 2006 வரை குஜராத் மாநில காவல்துறையினர் நடத்திய 21 என்கவுன்டர்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க குஜராத் அரசு முடிவு செய்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், சிர்புர்கர் ஆகியோர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
முன்னதாக மனுதாரர் பி.ஜி. வர்கீஸ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “போலி என்கவுன்டர்களில் கொல்லப்பட்டவர்களின் வயது 22 முதல் 37 வயதிற்குள் உள்ளது. இந்த இளைஞர்கள் செய்த குற்றம் பற்றி அவர்களின் குடும்பத்தினர் தெளிவாகத் தெரிந்துள்ளனரா என்பது சந்தேகமே.
கொலையானவர்களில் 6 பேர் காவல்துறையினரின் கஸ்டடியில் உள்ளபோது கொல்லப்பட்டுள்ளனர். எனவே அதுபற்றி விரிவான விசாரணை நடத்தப்படவேண்டியது அவசியம். என்கவுன்டர் கொலைகளுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்த வேண்டும்.
கஸ்டடிக் கொலை, என்கவுன்டர் கொலை தொடர்பான எல்லா வழக்குகளிலும் தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட்டு விசாரிக்கத் தகுந்த வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.