அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், தேவைப்பட்டால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைத் தியாகம் செய்யவும் காங்கிரஸ் தயார் என்றும் மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வேலையின்மை, வறுமையை நீக்கவும், பொருளாதார வளர்ச்சி பெறவும், பற்றாக்குறையைச் சமாளிக்கவும் நிறைய மின்சாரத்தை உருவாக்க வேண்டியுள்ளது. எனவே அணுசக்தி ஒப்பந்தத்திற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைத் தியாகம் செய்யவும் நாங்கள் தயார்." என்றார்.
மேலும், "மின்சாரத்திற்காக அணு சக்தியை நாடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. நிலக்கரி போன்ற மற்ற எரிபொருள்கள் விரைவில் தீர்ந்துவிடுவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன" என்றும் ஜெய்ஸ்வால் கூறினார்.