இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நாடாளுமன்ற அவைகளில் தாக்கல் செய்து அதன் மீது விவாதம் நடத்துமாறு அரசிற்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டது!
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நமது நாட்டின் பெரும்பான்மை மக்கள் எதிர்க்கின்றனர் என்றும், அதில் நாட்டின் இறையாண்மை பிரச்சனையாகியுள்ளதால் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிடுமாறு கோரி எம்.என். ராமமூர்த்தி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், வி.எஸ். சிர்புர்கார் ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்றும், அதனை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்குமாறு உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.
தனது மனுவின் சார்பாக வாதிட்ட மனுதாரர் ராமமூர்த்தி, எந்த அடிப்படையில் தனது மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிமன்றம் மறுக்கிறது என்பதனை விளக்கிடுமாறு கோரினார்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், ஒரு மனுவை விசாரணைக்கு ஏற்பதும், நிராகரிப்பதும் நீதிமன்றத்தின் தன்னிச்சையான அதிகாரத்திற்கு உட்பட்டதுதான் என்றும், அதற்கான காரணங்களை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை என்றும் கூறினர்.