கர்நாடகத்தில் சிறுபான்மை ஆகிவிட்ட குமாரசாமி அரசைக் கலைக்க வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தள அரசிற்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. விலக்கிக் கொண்டது. இதையடுத்து குமாரசாமி அரசிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தரம் சிங் உட்பட மாநில நிர்வாகிகள் ஆளுநர் ராமேஸ்வர் தாகூரைச் சந்தித்தனர்.
அப்போது, குமாரசாமி தலைமையிலான அரசிற்கு ஆதரவளிக்கத் தங்களுக்கு விருப்பமில்லை என்று குறிப்பிடப்பட்டு எழுதப்பட்ட காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினரகளின் தனித்தனிக் கடிதங்களை ஆளுநரிடம் அளித்தனர்.
முன்னதாக, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரித்விராஜ் செளகான் ஆளுநரைச் சந்தித்தார். இருவரும் மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல் தொடர்பாக 2 மணி நேரத்திற்கு மேல் விவாதித்தனர்.
கர்நாடக சட்டசபையின் 79 உறுப்பினர்களுடன் பாஜக முதல் இடத்திலும், காங்கிரஸ் 65 உறுப்பினர்களுடன் 2-வது இடத்திலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 58 பேருடன் 3-வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.