இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை எதிர்ப்பவர்கள் நாட்டின் நலனிற்கு எதிரானவர்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதை அடுத்து மத்திய அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது.
ஹரியானாவில் ரூபாய் 7,800 செலவில் அமைக்கப்பட உள்ள 1,500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிப் பேசிய சோனியா காந்தி, அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களை கடுமையாக விமர்சித்தார்.
சோனியா காந்தியின் விமர்சனத்திற்கு பதிலளித்த இடது சாரித் தலைவர்கள், தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகிவிட்டதையே சோனியாவின் பேச்சு உணர்த்துகிறது என்று கூறியுள்ளனர்.
அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினையால் ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு காங்கிரசே பொறுப்பு என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி. பரதன் கூறியுள்ளார்.
இப்பிரச்சினையில் எந்தவிதமான சமரசத்திற்ழும் இடமில்லை என்று கூறிய புரட்சி சோஷலிச கட்சியின் தலைவர் அவனி ராய், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இடது சாரிக் கூட்டணி விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி, அமெரிக்காவுடன் அணு சக்தி மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேற்கொள்வதால் இந்தியாவில் அயலுறவுக் கொள்கை சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி அளிக்க முடியுமா என்று மத்திய அரசிற்கு இடதுசாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அணு சக்தி ஒத்துழைப்பை ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளை விவாதிக்க அமைக்கப்பட்டுள்ள ஐ.மு. கூட்டணி - இடது கூட்டணியின் சிறப்புக் குழு நாளை ஷகூடவுள்ள நிலையில் இப்பிரச்சினையில் இரு கூட்டணிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு, ஆட்சி கவிழும் அளவிற்கு முற்றியுள்ளது.