Publish Date: Sat, 06 Oct 2007 (14:24 IST)
Updated Date: Sat, 06 Oct 2007 (14:23 IST)
கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதாதள அரசுக்கு JD(S) அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக பாஜக இன்று முடிவு செய்துள்ளது. இதையடுத்து குமாரசாமி அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது.
கர்நாடகத்தில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தள அரசு ஒப்பந்தப்படி கடந்த 3ஆம் தேதி ஆட்சி அதிகாரத்தை பாஜகவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது. எனவே கூட்டணி அரசிற்கு ஆபத்து ஏற்பட்டது.
பின்னர் முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆட்சியைப் பாஜகவிடம் ஒப்படைப்பதைவிட தேர்தலை சந்திக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் வருகிற 18ஆம் தேதி சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுவதென்றும், தேவைப்பட்டால் அக்கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதள அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கிடையில், நேற்றிரவு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சந்தித்துப் பேசிய மதசார்பற்ற ஜனதாதளத் தலைவர் தேவேகவுடா, கர்நாடக ஆட்சி அதிகாரத்தை பாஜகவிடம் ஒப்படைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், கர்நாடகத்தில் நிலவும் அரசியல் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காக பாஜகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று அவசரமாக டெல்லியில் கூடியது.
இக்கூட்டத்தில், மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வது என்றும், நாளை கர்நாடக மாநில ஆளுநரைச் சந்தித்து இம்முடிவைத் தெரிவிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் வெங்கையா நாயுடு, நாட்டில் எந்தக் கட்சியும் செய்யாத துரோகத்தை மதசார்பற்ற ஜனதாதளம் செய்துள்ளது என்றார்.