நாட்டில் எல்லாக் குழந்தைகளும் கல்வி பெறவேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு மத்திய அரசு ரூ.21,000 கோடி ஒதுக்கியுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தைச் செயல்படுத்த ஆகும் செலவுகளில் மத்திய அரசு, யூனியன் பிரதேசஙகள் மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய முறையினால் மத்திய அரசின் நிதிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வரும் புதிய முறைப்படி, 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் 2 ஆண்டுகளில் மத்திய அரசின் பங்கு 65 விழுக்காடாகவும், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநில அரசுகளின் பங்கு 35விழுக்காடாகவும் இருக்கும்.
அதாவது 2007-08 மற்றும் 2008-09 இல் 65:35 என்றும், பின்வரும் 2009-10 இல் 60:40, 2010-11 இல் 55:45 மற்றும் 2011-12 முதல் 50:50 என்றவாறு நிதி பங்கிடப்படும்.
மேலும் பொருளாதாரத்தில் நலிவடைந்த 8 வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் இந்த விழுக்காடு 90:10 என்றவாறு இருக்கும்.
இதன்படி 2007-08 ஆம் ஆண்டிற்கு மத்திய அரசு ரூ.21,181.39 கோடி ஒதுக்கியுள்ளது. மாநில அரசுகள் ரூ.7,179.41 கோடி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.