உத்தரபிரதேச மாநிலம் முகல்சராய் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.
முகல்சராய் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிக் காயமடைந்த 48 பேர் மண்டல ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை ரயில்வேத்துறை அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் நேற்றிரவு சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் லாலு, நெரிசலில் சிக்கி இறந்த 14 பெண்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், அவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு ரயில்வேயில் வேலை தரப்படும் என்றும் அறிவித்தார்.
விபத்தில் ஊனமடைந்தவர்களுக்கும் வேலை வழங்கப்படும் என்றும் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
முக்கியச் சந்திப்பாக விளங்கும் முகல்சராய் ரயில் நிலையத்தில் கூடுதல் நடைபாதைகள் அமைக்கப்படுமா என்று கேட்டதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாலு உறுதியளித்தார்.