மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) பதிவு செய்துள்ள 3 குற்ற வழக்குகள் தொடர்பாக தேரா சச்சா சவ்தா அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் ராம் ரகீம் இன்று ஹரியானா மாநிலம் அம்பாலா மபுக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு இடைக்கால பிணைய விடுதலை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேரா அமைப்பின் மேலாளர் ரன்ஜித் சிங், செய்தியாளர் ராம் சந்தர் சத்ரபதி ஆகியோர் கொலை, பெண் துறவியிடம் பாலியல் வன்முறை ஆகிய குற்றங்களில் தொடர்புள்ளவர் என்று பாபா குர்மீத் ராம் ரகீம் மீது மபுக வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்குகளில் பாபா தனது பிணைய விடுதலை மனுவை அம்பாலா நீதிமன்றத்தில் அக்டோபர் 4ஆம் தேதி தாக்கல் செய்யலாம் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.அதன்படி இன்று அம்பாலா ம்புகசிறப்பு நீதிமன்றத்திற்கு வந்த பாபா தனது பிணைய விடுதலை மனுவைத் தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிபதி ஆர்.கே.சாய்னி, பாபாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் வருகிற 15ஆம் தேதி பாபா மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பாபாவின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் குவிந்திருந்தனர். அம்பாலா நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.