கோபால்கஞ்ச் மாவட்ட நீதிபதி 13 வருடங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ உட்பட 3 பேருக்குத் தூக்கு தண்டனையும், முன்னாள் எம்.பி உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து பாட்னா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 1994-ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்ட நீதிபதி ஜி.கிருஷ்ணய்யா கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த பாட்னா நகர கூடுதல் அமர்வு நீதிமன்றநீதிபதி ராம் கிருஷ்ண ராய், முன்னாள் எம்.பியும் ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தலைவருமான ஆனந்த் மோகன், பிக்ரம்கஞ்ச் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ அக்லக் அகமது மற்றும் அருண் குமார் ஆகியோருக்குத் தூக்கு தண்டனை விதித்தார்.
ஆனந்த் மோகனின் மனைவியும், வைசாலி தொகுதியின் முன்னாள் எம்.பியுமான லவ்லி ஆனந்த், லால்கஞ்ச் தொகுதியின் (ஜெடியு) எம்.எல்.ஏ விஜய்குமார் சுக்லா என்ற முன்னா சுக்லா, சசி ஷேகர் மற்றும் ஹரேந்திர குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சியோஹர் தொகுதியின் முன்னாள் எம்.பி ஆனந்த் மோகன், கொலை நடந்த போது பீகார் மக்கள் கட்சியின் தலைவராக இருந்தார். அவரும் அவரின் மனைவியும் நீதிபதி கிருஷ்ணய்யாவைக் கொல்லக் கூலிப்படையை அமர்த்தியதாக குற்றம்சாற்றப்பட்டது.
தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஏழு பேருக்கும் ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் குற்றம்சாற்றப்பட்ட 36பேரில் 29பேர் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டனர்.