உத்தரப்பிரதேச மாநிலம் முகல்சராய் இரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 13 பெண்கள் இறந்தனர். மேலும் சில ஆண்கள் உட்பட 48பேர் படுகாயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் பீகார் மாநிலம் போஜ்பூர் மற்றும் பக்சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் 'ஜோதியா' பண்டிகையைக் கொண்டாடுவதற்காக வாரணாசிக்கு சென்று கொண்டிருந்தனர்.
வாரணாசியில் கொண்டாடப்படும் 'ஜோதியா' பண்டிகை புகழ்பெற்றதாகும். இதற்காக கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் பெருமளவில் முகல்சராய் இரயில் நிலையம் வழியாகப் பயணம் செய்து வருகின்றனர்.
இன்று காலை ஒரே நேரத்தில் 3 இரயில்கள் இந்த இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தன. அங்கு கூடியிருந்த மக்கள் இரயில்களை பிடிப்பதற்காக மேம்பால நடைபாதைகளில் ஏறினர். அப்போது நெரிசல் ஏற்பட்டது.
இதில் சிக்கிய பெண்கள் ஒருவர் மீது ஒருவராக விழுந்து நசுங்கினர். இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 48 பேர் படுகாயமடைந்தனர்.
இரயில் நிலையத்திற்குள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது இரயில்வே பாதுகாப்புப் படையின் பொறுப்பு. அவர்கள் கடமை தவறியதால் விபத்து நேரிட்டுள்ளது என்று அரசு இரயில்வே காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வயது முதிர்ந்தவர்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு உயரதிகாரிகள் ஆறுதல் தெரிவித்தனர்.
டெல்லியிலிருந்து ஹவுரா செல்லும் வழியில் உள்ள மிக முக்கியமான சந்திப்பு முகல்சராய் ஆகும். இந்த ரெயில் நிலையம் மத்திய கிழக்கு இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது.