அஸ்ஸாமில் சாலையோரம் மறைந்திருந்த தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 4 காவலர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.
அஸ்ஸாம் மாநிலம் கெய்த்தல்மன்பி மாவட்டம் கொட்லென் பகுதியில் பணியாற்றிவந்த மத்திய ரிசர்வ் காவல் படையினர், இன்று காலை கெய்த்தல்மானி வழியாக லாம்பெல்லில் உள்ள முகாமிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மலைப்பாதையில் 3 வாகனங்களில் வந்துகொண்டிருந்த காவலர்கள் மீது சாலையோரம் மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளையும் வீசினர்.
இதையடுத்துக் காவலர்கள் திருப்பிச் சுட்டனர். சுமார் 2மணி நேரம் நீடித்த சண்டையின் இறுதியில் 13 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த காவலர்கள் மண்டல மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே 4 பேர் இறந்துவிட்டனர். மற்றவர்களுக்கச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதும் தெரியவில்லை.
இதேபோல, தடை செய்யப்பட்ட மக்கள் புரட்சிக் கட்சியினர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்திய தாக்குதலில் அஸ்ஸாம் ரைஃபில் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் கிராம மக்களைத் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.