Publish Date: Wed, 03 Oct 2007 (16:00 IST)
Updated Date: Wed, 03 Oct 2007 (16:00 IST)
வடக்குக் காஷ்மீரில் நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டையில் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இருவரும், அல் பதார் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேரும் கொல்லப்பட்டனர். மேலும் 2 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள தங்மார்க் பகுதியில் நேற்று நண்பகல் முதல் தீவிரவாதிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் சண்டை நடந்து வருகிறது.
இந்தச் சண்டையில் தீவிரவாதிகள் 3பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன் அல் பதார் இயக்கத்தின் டிவிசனல் கமாண்டர் என்று தெரியவந்துள்ளது.
எதிர்த்தாக்குதலில் இராணுவத்தின் மேஜர் நிலையிலுள்ள அதிகாரி கே.பி.வினய் இறந்தார். மற்றொரு அதிகாரி இராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் இறந்தார். மேலும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
அருகில் உள்ள முகாம்களில் இருந்து கூடுதல் படைகள் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளன. தாக்குதல் நடைபெறும் பகுதி முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.