Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரியல் எஸ்டேட் முறைப்படுத்த தனி ஆணையம் : ஜெய்பால் ரெட்டி!

ரியல் எஸ்டேட் முறைப்படுத்த தனி ஆணையம் : ஜெய்பால் ரெட்டி!

Webdunia

, புதன், 3 அக்டோபர் 2007 (13:10 IST)
ரியல் எஸ்டேட் துறையை கண்காணித்து, நெறிப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.

இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சி பெற்றுவரும் ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறைகளில் பல ஒழுங்கீனங்கள் நடப்பதாகவும், செயற்கையாக காலி மனைகளின் விலைகள் உயர்த்தப்படுவதாகவும் பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

ஒவ்வொரு நகரத்திலும் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகவும், அலுவலகங்கள் கட்டவும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் மனையின் சொந்தக்காரர்கள் இலாபம் அடைவதை விட இடைத் தரகர்கள் இலாபம் அடைந்து வருகின்றனர். பல ஊர்களில் ஒரே காலி மனையை பலருக்கு விற்பனை செய்வது, மனையின், வீட்டின் சொந்தக்காரருக்கே தெரியாமல் அடுத்தவர்களுக்கு விற்பனை செய்வது, போலி பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்வது, பவர் ஆப் அட்டர்னி எனப்படும் அதிகார பத்திரத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்வது போன்ற முறைகேடுகள் ரியல் எஸ்டேட் தொழிலில் நடந்து வருகின்றன.

இதனால் பல அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இந்த வகையான மோசடி பற்றி காவல் துறையில் புகார்களும், நீதி மன்றங்களில் வழக்குகளும் தினந்தோறும் குவிகின்றன.

இத்துடன், குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்யும் கட்டுமான நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளை பெருநகர வளர்ச்சி ஆணையம், நகராட்சிகள் போன்ற சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் கட்டி விற்பனை செய்கின்றனர். இதனால் வீட்டை வாங்கியவர்கள் பல்வேறு விதங்களில் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.

இவற்றை முறைப்படுத்தி, பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகாமல் பாதுகாக்கும் வகையில் ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறைகளை முறைப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இது குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ். ஜெயபால் ரெட்டி ரியல் எஸ்டேட் மாநாட்டில் பேசும் போது, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறைகளை ஒழுங்கு படுத்த, மத்திய அரசு ஒழுங்கு முறை ஆணையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இது அடுத்த ஆறு மாதங்களில் செயல்படத் துவங்கும் என்று கூறினார்.

இந்த ஒழுங்கு முறை ஆணையம் டெல்லியில் கட்டுமானத் துறை மற்றும் நுகர்வோரின் (குடியிருப்பு, அலுவலகம், வீட்டு மனை வாங்குபவர்கள்) புகார்களை விசாரித்து தீர்வு காணும். இது ஒரு மாதிரி சட்டம்.

மத்திய அரசு, எல்லா மாநில அரசுகளிடமும் இந்த மாதிரி சட்டத்தைப் போன்ற சட்டங்களை இயற்றும் படி கேட்டுக்கொள்ளும்.

நிலம் மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. ஆகையால், மத்திய அரசு நாடு முழுவதற்குமான சட்டத்தை இயற்ற முடியாது. இப்போது நாங்கள் டெல்லியில் மாதிரி சட்டத்தை இயற்றியுள்ளோம். இது போன்ற சட்டங்களை இயற்றும் படி மாநில அரசுகளை கேட்டுக் கொள்வோம்.

இந்த ஒழுங்குமுறை ஆணையம், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வாங்கும் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பளிப்பதுடன், கட்டுமான நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல் வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண பயனுள்ளதாக இருக்கும் என்று ஜெய்பால் ரெட்டி கூறினார்.

மனை, வீடு போன்றவற்றின் விலைகள் அதிகரிக்காமல் இருக்க, மாநில அரசுகள் முத்திரை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் ஜெய்பால் ரெட்டி கேட்டுக் கொண்டார்.

அமைச்சரின் அறிவிப்பை ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்கள் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து கட்டுமானத்துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அன்ஸால் ஏ.பி.ஐ நிறுவனத்தின் இயக்குநர் பிரனேவ் அன்சால் கூறும் போது, ரியல் எஸ்டேட் துறையில் பல மோசடிகள் நடக்கின்றன. இந்த துறையை விரைவில் ஒழுங்குபடுத்துவது மிக அவசியம் என்றார்.

இத்துறையின் மற்றொரு முன்னணி நிறுவனமான பர்ஷவநாத் டெவலப்பர்-ன் சேர்மன் பிரதீப் ஜெயின் கூறும் போது, மத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம். தொலை தொடர்பு, வங்கி போன்ற துறைகளை ஒழுங்குபடுத்தும் போது, ரியல் எஸ்டேட் துறையும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil