கர்நாடகாவில் நாளைக்குள் தங்களிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வர் குமாரசாமிக்கு பாரதிய ஜனதாவிடம் கெடு விதித்துள்ளது.
கர்நாடகாவில் தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய கூட்டணி அரசு நடைபெறுகிறது. தேவகவுடாவின் மகன் குமாரசாமி முதல்வராக உள்ளார்.
இரு கட்சிகளின் ஒப்பந்தப்படி, முதல்வர் குமாரசாமி வரும் 3ம் தேதி பாரதிய ஜனதாவிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இதற்கு இரு கட்சிகளுமே தயாராகிவந்த நிலையில், பாரதிய ஜனதா அமைச்சர் ஸ்ரீராமுலு, முதல்வர் குமாரசாமி மீது கொலை முயற்சி புகார் கூறினார். இதனால், ஆட்சியை ஒப்படைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக, பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா பெங்களூரு வந்துள்ளார். அவரது ஆலோசனையின் பேரில், ஸ்ரீராமுலு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைதொடர்ந்து, தேவகவுடாவுடன் யஷ்வந்த் சின்ஹா நடத்திய பேச்சுவார்ததை தோல்வியடைந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே, ஆட்சியை பாரதிய ஜனதாவிடம் ஒப்படைப்பது குறித்து தங்களது கட்சியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று குமாரசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக, பாரதிய ஜனதாவும் தங்களது கட்சியினருடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், வரும் 3ம் தேதிக்குள் ஆட்சியை பாரதிய ஜனதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வர் குமாரசாமிக்கு யஷ்வந்த் சின்ஹா கெடு விதித்துள்ளார்.
திட்டமிட்டபடி நாளைக்குள் குமாரசாமி தங்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்காவிட்டால், பாரதிய ஜனதாவை சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்போதுள்ள சூழ்நிலையில் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடப்பதை தவிர்க்க முடியாது. முதல் மந்திரி குமாரசாமி தன்னிச்சையாக பா.ஜ.வுடன் முன்பு செய்து கொண்ட உடன்பாடு எங்களை கட்டுப்படுத்தாது. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று தேவகவுடா கூறியுள்ளார்.