ஐக்கிய நாடுகள் அவையின் 62வது வருடாந்திர மாநாட்டில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தி பேசுகிறார். அதற்காக அவர் நேற்று இரவு நியூயார்க் சென்றார்.
சோனியா காந்தியுடன் அவரின் மகனும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் புதிய பொதுச் செயலருமான இராகுல் காந்தியும் சென்றுள்ளார்.
இருவரும் இன்று நியூயார்க்கில் இந்திய தேசியஅயல் நாடு வாழ் காங்கிரசுக் கட்சி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பேசுகின்றனர். பல்வேறு இந்திய அமெரிக்கக் கூட்டமைப்பு நிறுவனங்களின் நிதியுதவியில் நடைபெறும் இக்கூட்டத்தில் 3000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினமாகக் கடைபிடிக்கப்படும் என்று ஐ.நாவில் கடந்த ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐ.நாவில் சோனியா காந்தி பேசும்போது, மகாத்மா காந்தியின் கொள்கைகளான அகிம்சை, சமாதானம், ஒருமைப்பாடு போன்ற கருத்துக்களை விளக்குவதுடன், இன்றைய உலகிற்கு அவற்றின் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.