நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் விவாதிக்கும் வரை இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கக் கூடாது என்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டத்தை அடுத்து, மத்தியக் குழுக் கூட்டம் கடந்த மூன்று நாட்களாகக் கொல்கத்தாவில் நடைபெற்றது.
அரசியல் தலைமைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மத்தியக்குழு, கட்சியின் நிலைபாட்டை செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று, செய்தியாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த நிருவாகிகள் தெரிவித்தனர்.
மேலும், சர்வதேச அணுசக்தி முகமையுடன் கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாகப் பேசுவது உள்ளிட்ட எந்த அடுத்தகட்ட நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஹைடு சட்டத்தின் பல்வேறு தன்மைகளையும், வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அச்சட்டம் அமல்படுத்தப்படும் விதங்களையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் இணைந்த இடதுசாரித் தலைவர்கள் குழு ஆய்வு செய்துவருகிறது.