கட்டுமானத் துறையில் உள்ள தொழிலாளர்களையும் போனஸ் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதென்று மத்திய அரசு இன்று முடிவு செய்துள்ளது. மேலும் போனசிற்கான தகுதிச் சம்பளம் மாதம் ரூ.3,500 முதல் ரூ.10,000 வரை என்று உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற, பிரதமர் மன்மோகன்சிங், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்ணான்டஸ், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஷ்முன்சி ஆகியோர் கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் முடிவை உடனடியாகச் செயல்படுத்தும் வகையில், அரசு விரைவில் சட்டமியற்ற உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உழைக்கும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்கான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நடவடிக்கையை பறைசாற்றுவதாக இந்த முடிவு உள்ளது என்று அமைச்சர் பிரியரஞ்சன் தாஷ்முன்சி கூறினார்.
1965ஆம் ஆண்டு போனஸ் சட்டத்தின் கீழ் கட்டுமானத் தொழிலாளர்கள் கொண்டுவரப்பட உள்ளனர். மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் எடுக்கப்பட்ட மகத்தான முடிவாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சம்பள உயர்வை அமல்படுத்துவதற்காக போனஸ் சட்டத்தின் பிரிவு 2(13) இல் திருத்தம் செய்யப்படும். சட்டத்தின் பிரிவு 32(4)ஐ நீக்குவதன் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் போனஸ் தகுதி விரிவுபடுத்தப்படும். அரசின் இந்த முடிவால் அமைப்புசார்ந்த தொழிலாளர்களில் 7விழுக்காட்டினர் கூடுதலாகப் பயன்பெறுவர் என்று அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்ணான்டஸ் கூறினார்.