இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு அதற்குப் பாஜக ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பாஜகவின் தற்போதைய எதிர்ப்பு நிலையை அவர் விமர்சித்தார்.
அகமதாபாத்தில் நேற்றுச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அணுசக்தி ஒப்பந்தம் மூலம் கிடைக்கவிருக்கும் மின்சக்தி மிகக் குறைவானது என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்று தெரிவித்தார்.
மேலும் "நிலக்கரி, தண்ணீர், நிலத்தடி எரிபோருள் மற்றும் மரபு சார்ந்த எரிபொருட்கள் மூலம் 1,30,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 3 விழுக்காட்டை மற்றுமே அணுசக்தி நிறைவு செய்கிறது.
ஃபிரான்சில் 70 முதல் 80விழுக்காடும், ஜப்பானில் 50 விழுக்காடும், அமெரிக்காவில் 20விழுக்காடும் மின் தேவையை அணுசக்தி நிறைவு செய்கிறது. சீனா அடுத்த பத்து ஆண்டுகளில் 50 மில்லியன் டாலர் செலவில் 77 அணு உலைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
பிறகு நாம் மட்டும் எப்படி அணுசக்தியைப் புறக்கணிக்க முடியும். எதிர்காலத்தில் நமது தேவைக்கான எரிசக்தி மூலங்களை உருவாக்க வேண்டியது மறுக்கமுடியாத அவசியம்.
எல்லைமீறி விலை ஏறிவரும் சூழ்நிலையில் எண்ணையை மட்டும் நம்பியிருப்பது அபாயகரமானது.
இந்த விசயத்தில் பாஜக இருநிலைக் கொள்கையுடன் செயல்பட்டுவருகிறது. முதலில் நாட்டின் வளர்ச்சிக்கு அணுசக்தி இன்றியமையாதது என்று பாஜக கூறியது.
பின்னர், அணுசக்தி ஒப்பந்தத்திற்கான முன்வரைவை இந்தியா ஏற்றுக் கொண்டபோது, அது நாட்டின் பொருளாதாரத்திற்கும் இறையாண்மைக்கும் எதிரானது என்று கூறி பாஜக எதிர்த்தது.
எனவே, அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை பாஜக புரிந்து கொள்ளவேண்டும். ஆதரவளிக்க வேண்டும்" என்று கபில்சிபல் வலியுறுத்தினார்.