இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான நிலைபாட்டில் சமரசத்திற்கு இடமில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு முடிவு செய்துள்ளது.
முன்கூட்டியே தேர்தல் வருவதைத் தவிர்க்கும் முடிவு காங்கிரசின் கையில் உள்ளது என்று அக்கட்சி கூறியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் 3 நாள் மத்தியக் குழுக் கூட்டம் கொல்கத்தாவில் இன்று தொடங்கியது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு, ''அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நாங்கள் எந்தச் சமரத்தையும் செய்துகொள்ள மாட்டோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிப் பிரதிநிதிகளுடன் இடதுசாரித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் அக்டோபர் 5ஆம் தேதி நடக்கிறது. அதன்பின்னர் மற்றொரு கூட்டமும் நடக்கிறது. அதையடுத்து காங்கிரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்ப்போம்'' என்றார்.
''இந்த விவகாரம் தொடர்பாக எங்களின் மற்ற நிர்வாகிகளும் பேச உள்ளனர். முன்னதாக அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் நான் பேசும்போது எங்கள் கருத்தைத் தெளிவாகக் கூறியுள்ளேன்'' என்றும் ஜோதிபாசு தெரிவித்தார்.