உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சபர்வால் மீதான குற்றச்சாட்டுக்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
உச்ச நீதி மன்றத்தின் ஒய்வு பெற்ற தலைமை நீதிபதி சபர்வால், டெல்லியில் அலுவவகங்கள், கடைகள், வீடுகளை இடிப்பதற்கு உத்தரவிட்டார். அவரின் இரண்டு மகன்களும் வணிக வளாகங்களை கட்டும தொழிலில் ஈடுபட்டுள்ளதால், அவர்களுக்கு சாதகமாக, இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக மிட் டே என்ற தினசரி தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டது.
இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்று டெல்லி உயர் நீதிமன்றம், மிட் டே யின் பதிப்பாளர், ஆசிரியர், மற்றும் இரண்டு செய்தியாளர்களுக்கு 4 மாதம் சிறை தண்டனை விதித்துது.
இந்த சிறை தண்டனைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பத்திரிக்கையாளர்களுக்கு சிறை தண்டனை விதித்து டெல்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு, நாடு முழுவதும், பல்வேறு மட்டங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த பிரச்சனை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ச் கட்சியின் அதிகார பூர்வ வார இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் தலையங்கத்தில் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளதாவது:
“சபர்வால் மீதான குற்றச்சாட்டில், எந்த அளவு உண்மை இருக்கின்றது என்பது, விசாரணை நடத்தினால் தான் தெரியவரும். எனது நீதிமன்ற நடவடிக்கைகளில் எந்த தவறும் இல்லை என்று நீதிபதி சபர்வால் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
இந்த பிரச்சனையில் தொடர்பு உள்ள பத்திரிக்கையாளர்கள், நீதிபதி சபர்வால் மீதான புகார்களை நிருபிக்க தயாராக இருப்பதாக கூறுகின்றனர். எனவே இதில் உண்மை என்ன என்பது விசாரணை நடத்தினால் தான் தெரியவரும்.
இந்த விசாரணை நீதித்துறையின் மேல் உள்ள நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும். குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும், அரசு அதிகாரம் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதிலும் நீதிமன்றங்களின் பங்கு மகத்தானது.
நீதித்துறையின் ஒழுங்கீனம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராய தனியாக ஒரு நடைமுறையை உருவாக்குவது அவசியம் என்று தோன்றுகிறது. நீதித் துறை மீது குற்றங் குறைகளை எழுப்ப வசதியாக வரம்பு, வரைமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
எந்த சந்தர்ப்பத்திலும் நீதித்துறையின் அதிகாரம், கருத்துச் சுதந்திரத்தின் உரிமையை நசுக்க வாய்ப்பளிக்க கூடாது” என்று பீப்பிள் டெமாக்ரசி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.