இந்தியாவுக்கும் ஃபிரான்சுக்கும் இடையிலான அணுசக்தி வணிகக் கூட்டம் அக்டோபர் 15ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது.
ஃபிரான்சிடம் இருந்து 6 அணு உலைகளை வாங்க இந்திய அணுசக்தி நிறுவனம் திட்டமிட்டது. அதில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்தியாவுடன் பேசியபிறகு ஃபிரான்ஸ் தூதரகம் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது என்று மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறினார்.
"இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், அணுசக்தித் திட்டங்களில் இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்துப் பேசப்படும். இரு நாடுகளிலும் உள்ள தொழிற்சாலைகளுக்கு இடையில் உறவுகளை மேம்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்படும்" என்று இந்திய அணுசக்தி நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.கே.அகர்வால் கூறினார்.
இருநாடுகளிலும் உள்ள 40 அணுசக்தி நிறுவனங்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வந்த பிறகுதான், ஃபிரான்சிடம் அணு உலைகள் வாங்கும் வணிகத்தில் இந்தியா நுழைய முடியும். ஆனால் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் செயலுக்கு வரத் தடைகள் பல உள்ளன. எனவே இவ்வணிகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், அணுஎரிபொருள் வழங்கும் நாடுகளுடன் அமெரிக்கா நடத்த வேண்டிய பேச்சுவார்த்தைகள், சர்வதேச அணுசக்தி முகமையுடன் கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை ஆகியவை உள்ளிட்ட எல்லாச் செயல் முறைகளையும் விரைவில் முடிக்க அமெரிக்கா காலம் நிருணயித்து உள்ளது.