துறைமுகத் தொழிலாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்தி மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உத்தரவிட்டார்.
துறைமுகம் மற்றும் சரக்ககப் பணியாளர்களுக்கான 5 கூட்டமைப்பின் தலைவர்கள் மத்திய கப்பல், நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து மந்திரி டி.ஆர்.பாலுவை கடந்த 12ஆம் தேதி டெல்லியில் சந்தித்தனர். அப்போது துறைமுகப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர் என கப்பல், நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பாக மத்திய தொழிலாளர் கூட்டமைப்பினர் ஏற்கனவே கொடுத்துள்ள 2 மேற்கோள்களையும், இது தொடர்பான வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பையும் வாபஸ் பெறும் பட்சத்தில் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார் என்று அமைச்ச செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது மத்திய தொழிலாளர் ஆணையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பணியாளர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், மத்திய தொழிலாளர் ஆணையத்தில் உள்ள மேற்கோள்கள் மற்றும் வேலை நிறுத்த அறிக்கையை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஒரு மனதாகத் தெரிவித்தனர். இந்த தகவலை மத்திய தொழிலாளர் ஆணையம், மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு உறுதி செய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து துறைமுகத் தொழிலாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்தி மத்திய மந்திரி டி.ஆர்.பாலு உத்தரவிட்டார். இந்த உத்தரவு வருகிற 30-ந் தேதி முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் துறைமுகம் மற்றும் சரக்கக தொழிலாளர்கள் 66 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள் என கப்பல், நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.