மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததன் மூலம் நாடாளுமன்றத்தை சிறுமைப்படுத்தியுள்ளார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது!
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் முழுமையாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை என்று மனுதாரர்களுக்காக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறியதை சுட்டிக்காட்டிப் பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஜி.இ. வாகனவதி, முழுமையாக விவாதித்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் குறித்து எதிர்தரப்பு வழக்கறிஞர் கூறியது நாடாளுமன்றத்தை சிறுமைப்படுத்துவதாகும் என்று கூறினார்.
இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்குகளை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே. தாக்கர், ஆர்.கே. ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன்பு வாதிட்ட வழக்கறிஞர் வாகனவதி, நாடாளுமன்றத்தைப் போன்ற அரசின் உன்னத அமைப்பை சிறுமைப்படுத்தும் முயற்சியை சகித்துக்கொள்ளக் கூடாது என்று கூறினார்.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மருத்துவம் உயர் கல்வி கற்பிக்கும் நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு முன்பு அது குறித்து தீவிரமாக ஆராய்ந்த பின்னரே நாடாளுமன்றத்தில் சட்ட வரைவை அரசு அறிமுகப்படுத்தியது என்று கூறினார்.
பிரதமரால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழு, பொதுப் பட்டியலில் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதை முழுமையாக முடிவு செய்து அரசிற்கு பரிந்துரை அளித்ததாகக் கூறினார்.
இதர பிற்படுத்தப்பட்டோரில் உள்ள பொருளாதார ரீதியான முன்னேறிய வகுப்பினர் (கிரீமி லேயர்) குறித்து மேற்பார்வைக் குழு ஆராயவில்லை என்று கூறிய வாகனவதி, இந்தியா ஒரு அறிவார்ந்த சமூகமாக எதிர்காலத்தில் உருவாகும் வாய்ப்பும் திறனும் உள்ளதென்றும், அதற்கு பல நூற்றாண்டுகளாக அழுத்தப்பட்டுக் கிடந்த இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்களை மேலே கொண்டுவர இட ஒதுக்கீடு அவசியமானது என்றும், சமமற்றவர்களை அதே தன்மையின் அடிப்படையில் சலுகைகளை அளித்து சமநிலைப்படுத்துவதே அவசியமானது என்று கூறினார்.
மத்திய அரசின் சார்பாக வழக்கறிஞர் வாகனவதி தனது வாதத்தை இன்று முடித்துக் கொண்டார். இவ்வழக்கு விசாரணை மீண்டும் அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கும் போது தமிழக அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் கே. பராசரண் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வாதாடவுள்ளார்.