Publish Date: Thu, 27 Sep 2007 (16:21 IST)
Updated Date: Thu, 27 Sep 2007 (16:20 IST)
செவ்வாய் கிரகம், நிலவுப் பயணங்கள் உட்பட விண்வெளி ஆராய்ச்சியில் ஒத்துழைப்பதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து இந்தியாவும், ரஷ்யாவும் பேச்சு நடத்தியுள்ளன.
ஹைதராபாத்தில் நடைபெறும் 58வது சர்வதேச விண்வெளியியல் மாநாட்டின் இடையில், ரஷ்யாவின் ஃபெடரல் விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ஜெனரல் அனட்டாலி பெர்மினோ, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் மாதவன் நாயரைச் சந்தித்துப் பேசினார்.
"செவ்வாய் கிரகம், நிலவுப் பயணங்களின்போது இஸ்ரோவுடன் ஒத்துழைக்க உள்ள வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது" என்று பெர்மினோ கூறியுள்ளார்.
இது தொடர்பான விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, இருநாட்டு விண்வெளி ஆய்வு மையங்களின் அதிகாரிகள் கலந்துகொள்ளும் சிறப்புக் கூட்டம் நவம்பர் மாதம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிலவிற்கு செயற்கைக்கோளை அனுப்பும் சந்திராயன்-I திட்டத்தை இந்தியா அடுத்த ஆண்டு செயல்படுத்த உள்ளது. இதையடுத்து 3ஆண்டுகளில் சந்திராயன்-II திட்டத்தை இந்தியா அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"சந்திராயன்-II திட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற எல்லா நாடுகளும் ஆர்வமாக உள்ளன" என்று இஸ்ரோவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Webdunia
Publish Date: Thu, 27 Sep 2007 (16:21 IST)
Updated Date: Thu, 27 Sep 2007 (16:20 IST)