பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வரும் என்று கணித்துத் தயாராகிவரும் நிலையில், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அளித்துவரும் ஆதரவைத் தொடருவதா என்ற இறுதி முடிவை எடுப்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு நாளை கொல்கத்தாவில் கூடுகிறது.
மூன்று நாட்கள் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, நாளை ஒரு நாள் நடைபெறும் அரசியல் தலைமைக் குழு இறுதி செய்யும்.
நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கருதுகின்ற அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது நல்லதொரு முடிவை எடுத்து இடைத்தேர்தலைத் தவிர்க்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
''அணு சக்தி ஒப்பந்தத்தில் ஓரடி கூட முன்னே செல்லக்கூடாது என்று நாங்கள் கேட்டுக் கொண்டது முதல், கடந்த ஒரு மாதமாக அரசு எடுத்த நிலைபாடுகளை ஆய்வு செய்வதற்கான முதல் கூட்டமாக இது அமையும். அணுசக்தி ஒப்பந்தத்தால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் கட்சியின் சார்பில் நடைபெற்ற இயக்கங்களின் முடிவுகளும் விவாதிக்கப்படும்'' என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.