இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை சார்ந்திருககவில்லை என்றாலும், நமது நாட்டின் எரிசக்தித் தேவையில் அணு சக்தியின் பங்கை அதிகரிப்பது நமது நலனிற்கு தேவையானது என்று நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்!
ஐ.நா. மாநாட்டில் கலந்துகொள்ள வாஷிங்டன் சென்றுள்ள நிதியமைச்சர் சிதம்பரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
"இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு எந்தவிதத்திலும் இந்த ஒப்பந்தம் ஒரு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. இந்த ஒப்பந்தத்தினால் நமது அணு மின் உலைகளுக்குத் தேவையான அணு எரிபொருளை பெறுவது மட்டுமின்றி, அணு சக்தி தொழில்நுட்ப ரீதியான இரட்டைப் பயன் கொண்ட உபகரணங்களைப் பெறுவதற்கு உள்ள தடை நீக்கப்படும். அந்த விதத்தில் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் பயனுள்ளதே. நமது சுய தேவையின் அடிப்படையில் அணு மின் சக்தி தயாரிப்பை அதிகப்படுத்த வேண்டியது அவசியமானது" என்று சிதம்பரம் கூறினார்.
இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் அணு மின் சக்தியின் பங்கு 3 விழுக்காடாக உள்ளது. இதனை 10 விழுக்காடாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஜப்பானின் மொத்த மின் உற்பத்தியில் 30 முதல் 40 விழுக்காடும், ஃபிரான்சின் மின் உற்பத்தியில் 70 விழுக்காடும் அணு சக்தியைக் கொண்டே பெறப்படுகிறது என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
முன்பைவிட மின் உற்பத்திக்கு அணு சக்தியை பயன்படுத்துவதே பல நாடுகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன என்று கூறிய சிதம்பரம், உலக அளவில் ஏற்பட்டு வரும் வானிலை மாற்றத்தை சமாளிக்க அணு சக்தி ஒரு சாதகமான அம்சம் என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.