பாரத அரசு வங்கியுடன், இதன் ஆறு துணை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 27 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
பாரத அரசு வங்கிக்கு ஏழு துணை வங்கிகள் உள்ளன. இவை ஸ்டேட் பாங்க் ஆஃப் செளராஷ்டிரா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பிக்கானீர் மற்றம் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தூர் ஆகியவைகளாகும்.
வங்கித் தொழிலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சிறிய வங்கிகள் தனியாக இயங்கி தாக்கு பிடிக்க முடியாது. வெளிநாட்டு வங்கிகள், தனியார் வங்கிகளுடன் போட்டியிட வேண்டும் என்றால், அதிகளவு மூலதனம் வேண்டும். நாடு முழுவதும் கிளைகள் தேவை என்பன போன்ற காரணங்களினால், பாரத அரசு வங்கியுடன், அதன் துணை வங்கிகளையும் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
இதனால் தங்களின் நலன் பாதிக்கப்படும் என்று வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாரத அரசு வங்கியுடன், அதன் துணை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் செளராஷ்டிரா வங்கியை தவிர, மற்ற ஆறு வங்கியைச் சேர்ந்த ஊழியர்கள் வருகின்ற 27 ந் தேதி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
பாரத அரசு பாங்க் ஆஃப் செளராஷ்டிராவின் இயக்குநர் குழுவும், பாரத அரசு வங்கியின் இயக்குநர் குழுவும் இந்த இரு வங்கிகளின் இணைப்பிற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளன. ஆகவே இந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை என்று ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தூரின் அகில இந்திய அதிகாரிகள் நடவடிக்கை குழுவின் தலைவர் அலோக் கோரி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், பாரத அரசு வங்கியின் துணை வங்கிகள் தனித்தன்மை வாய்ந்ததவை. அவை அவை இயங்கும் மாநிலத்தில் பரந்த அளவில் கிளைகளை கொண்டுள்ளன. அத்துடன் நல்ல இலாபமும் சம்பாதிக்கின்றன. பாரத அரசு வங்கி பெரிய வங்கியாக வளரவும், தனியார் வங்கிகளின் போட்டியை சமாளிக்கவும் இவற்றை இணைத்துக் கொள்வது எளிதான வழி என கருதுகிறது என்று அலோக் கோரி குற்றம் சாட்டினார்.