காற்றில் மாசு கலப்பதைக் கட்டுப்படுத்தும் விதமாக, பேருந்துகளில் தூய்மையான எரிபொருளைப் பயன்படுத்தும் நகரங்களில் உலகிலேயே டெல்லி முதலிடம் வகிக்கிறது என்று பருவ நிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டெல்லி மேயர் ஆர்த்தி மெக்ரா தெரிவித்துள்ளார்!
சுற்றுச்சூழல் பிரச்சனைகளை வெளிக் கொண்டுவருவதில் உள்ளூர் அமைப்புகள் மேற்கொள்ளும் கடுமையான முயற்சிகளில் இருந்து அரசுகள் பாடம் கற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எரிபொருள் சிக்கனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள், காற்று மாசுபடுவதைக் குறைக்கவும், மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் உதவும். இதனால் வேலைவாய்ப்பும் பெருகும் என்றும் மேயர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் உள்ளூர் நிர்வாகங்களை அதிகளவில் ஈடுபடுத்தும் வகையில் அவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட 150க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளை அவர் வலியுறுத்தினார்.
பருவ நிலை மாற்றங்கள் தொடர்பாக விவாதிக்கும் கூட்டத்திற்கு உலகளவில் 26 நகரங்களில் இருந்து அழைக்கப்பட்டிருந்த மேயர்களில் ஒருவராக ஆர்த்தி கலந்து கொண்டு தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.