இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் கொல்கத்தா நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் பேருந்து, இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது!
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் பருவ மழை பெய்து வருகிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமான மழை பெய்ததால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சனிக்கிழமை முதல் பெய்துவரும் மழையினால், கொல்கத்தாவும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தா பல்கலைக் கழகம், தனது தேர்வுகளை இன்று இரத்து செய்துவிட்டது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் இன்னும் மின்தடை சரியாகவில்லை. கல்லூரி சாலை, பெகலா, பங்கூர் மற்றும் சால்ட் லேக் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா குடியிருக்கும் பால்ம் அவென்யூ பகுதியில் தேங்கியிருக்கும் நீர் மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டது.