அமேதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி அகில இந்தியக் காங்கிரஸ்க் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெற்ற மிகப்பெரிய நிர்வாகிகள் மாற்றத்தின் இறுதியில் இளைஞர் காங்கிரஸ் மற்றும் என்எஸ்யுஐ-யின் பொறுப்புகள் ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் திவேதி, 12 பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ராகுல் காந்தியைத் தவிர, மோதிலால் வோரா, அசோக் ஜெலட், ஹரிபிரசாத், திக்விஜய்சிங், கிசோர் சந்திர தியோ, முகுல் வாஸ்னிக், மார்கரெட் அல்வா, மொக்சினா கிட்வாய், பிரித்விராஜ் சவான், நாராயண்சாமி, மற்றும் திவேதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதிய செயற்குழுவில் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், அகமது பட்டேல், அர்ஜுன் சிங், அம்பிகா சோனி, எ.கே.அந்தோனி, பி,கே,ஹரிபிரசாத், ஜனார்தன் திவேதி, மொக்சினா கிட்வாய், மார்கரெட் அல்வா, மோதிலால் வோரா, பிரணாப் முகர்ஜி, ராகுல் காந்தி, சைபுதீன் ஜோஷ் மற்றும் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்று திவேதி அறிவித்துள்ளார்.