இந்தியா, பாகிஸ்தான் இடையில் அடுத்த மாதம் புதுடெல்லியில் நடைபெறவுள்ள இரு பேச்சின்போது, அதிகரிக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இந்தியா தனது கவலையைத் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பேச்சில் கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு உள்ளிட்ட அண்மைக்காலத் தாக்குதல்கள் முக்கிய இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நடைபெற்ற சில பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இந்தியா எழுப்பிய கேள்விகளுக்கு இன்னமும் பாகிஸ்தான் பதிலளிக்கவில்லை. இப்போது நடைபெறவுள்ள பேச்சில் மும்பை மற்றும் வாரணாசித் தாக்குதல்கள், சம்ஜவ்தா இரயில் குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு போன்ற தாக்குதல்கள் தொடர்பான விவாதங்களை எழுப்ப இந்தியாவிற்கு மற்றொரு வாய்ப்பை அளிக்கும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய-பாகிஸ்தான் இணைந்த பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பின் இரண்டாவது கூட்டம் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கும்போது, இந்தத் தாக்குதல்கள் தொடர்பான முழுமையான விவரங்களை இந்தியா வழங்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சில் குறிப்பிட்ட முன்னேற்றமின்றி முடிந்துவிட்டது என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ உதவி பெறும் பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தயீபா, அல் பாதர் போன்றவை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி வருகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தத் தீவிரவாத அமைப்புகள் தங்கள் தொடர்புகளை நிலைநிறுத்துவதற்கான பொருளாதாரச் சூழலைச் சரியாகப் பராமரிக்கின்றன. பொருளாதாரக் கட்டமைப்புகள், மிகப்பெரிய தளங்களைக் குறிவைப்பதுடன், வழிபாட்டுக் கூடங்கள், பொதுப் போக்குவரத்து இடங்கள், சந்தைகள் போன்ற பொதுவான இடங்களைத் தாக்குவதற்கான பயிற்சிகளையும் அளிக்கிறார்கள் என்று தற்போதைய புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
மதக் கலவரங்களைத் தூண்டுவதுடன் சாதிகளுக்கிடையே மோதல்களையும் உருவாக்குகிறார்கள். இதற்கான ஆயுதங்களை நிலம் மற்றும் கடல் வழியாகக் கடத்திக் கொண்டுவருகிறார்கள் என்று செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.