"வெறும் 145 எம்பிகளைத்தான் கொண்டுள்ளோம் என்று காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும். இடதுசாரிகளின் ஆதரவில்தான் அரசு இயங்குகிறது" என்பதை உணர்ந்து கொண்டு அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அவசரம் காட்டாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
கூட்டணி அமையும் போது உருவாக்கப்பட்ட குறைந்தபட்சப் பொது செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், அமெரிக்கத் தீர்மானத்தின்படி செயல்பட அரசு அவசரம் காட்டுகிறது என்றும் அக்கட்சி குற்றம் சாற்றியுள்ளது.
"இந்த அணுசக்தி ஒப்பந்தம் 40 ஆண்டுகளுக்கானது... இதைச் செயல்படுத்த அவசரம் காட்டக்கூடாது. காங்கிரசுக்கு 145 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர் என்பதையும், இடதுசாரிகளின் ஆதரவில்தான் மத்திய அரசு இயங்குகிறது என்பதையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி புரிந்து கொள்ள வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
சண்டிகரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், " நாட்டு மக்களுடனும், கூட்டணிக் கட்சிகளுடனும், எங்களுடனும் இணைந்து செயல்படுவதா அல்லது அமெரிக்காவின் காலடியில் விழுந்து கிடப்பதா என்பதைப் பிரதமர் மன்மோகன் சிங்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
"அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆதரவிழந்து வருகிறார். 30 விழுக்காடு அமெரிக்க மக்கள்தான் அவரை ஆதரிக்கின்றனர்...எனவே அவரின் தாளத்திற்கு ஏற்றவாறு நாம் ஏன் ஆட வேண்டும்" என்று காரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இடதுசாரிகளின் எதிர்ப்பை காங்கிரசுத் தலைமை புரிந்து கொள்ள வேண்டும். ஒப்பந்த விவகாரத்தில் ஓரடி கூட நகரக்கூடாது என்றும், "ஆறு மாதங்களுக்குக் காத்திருங்கள். இந்த விவகாரத்தையொட்டி நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்துவோம்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
"இந்த ஒப்பந்தத்தை நாங்கள் விரும்பவில்லை... இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்" என்று காரத் தெரிவித்தார்.