Publish Date: Mon, 24 Sep 2007 (12:03 IST)
Updated Date: Mon, 24 Sep 2007 (12:03 IST)
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக எடுக்கப்படும் என்று அணுசக்தி ஆணையத் தலைவர் டாக்டர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.
வியன்னாவில் நடைபெற்ற மாநாட்டில் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணு சக்தி முகமையுடன் எந்தவிதமான பேச்சும் நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
"வியன்னாவில் கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பில் நான் பேசியபோது, இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் பற்றி சர்வதேச அணுசக்தி முகமையுடன் எந்தவிதமான அதிகாரபூர்வ விவாத்தையும் நான் நடத்தவில்லை. அதே நேரத்தில் அதற்கான ஆரம்ப பேச்சுக்கள் நடைபெற்றன" என்று வியன்னாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது ககோட்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் " குறிப்பாக இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றிப் பேசுவதற்குத்தான் நான் வியன்னா வந்தேன். ஆனால் பொதுவான பேச்சுக்கள் மட்டுமே நடைபெற்றன. இந்த அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் எதிர்பார்ப்புகள் நிறைய இருந்த காரணத்தால் சில அதிகாரபூர்வமற்ற பேச்சுக்கள் நடைபெற்றன" என்று கூறிய ககோட்கர் " அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறோம் என்றார்.
"இதற்கு முன்பு தில்லியிலும் வியன்னாவிலும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றி நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற பேச்சுக்களில் நாங்கள் தெளிவான முடிவை எடுத்துள்ளோம். அணு சக்தி உபகரணம் வழங்கு குழுவில் உள்ள 45 நாடுகளையும் சமூக ரீதியிலான அணு ஒத்துழைப்பிற்கு இணங்க வைப்பது மிகவும் கடினமான காரியம். உலகளவில் உள்ள எதிர்பார்ப்பின் அடிப்படையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா ஈடுபட வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்குப் புரியவைக்க முயற்சிக்கிறோம்" என்று ககோட்கர் கூறியுள்ளார்.
Webdunia
Publish Date: Mon, 24 Sep 2007 (12:03 IST)
Updated Date: Mon, 24 Sep 2007 (12:03 IST)