Publish Date: Sat, 22 Sep 2007 (19:44 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:22 IST)
பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் பாஜகவின் மூன்று நாள் கூட்டத்திற்கு மக்கள் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி குற்றம் சாற்றியுள்ளது!
"கூட்டத்திற்கு வந்துள்ள கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் தங்குவதற்கும், அவர்களின் போக்குவரத்திற்கும் பெருமளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. கூட்டத்திற்கான விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் புத்தகத்திற்கான செலவுகளை அரசு நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன" என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஜமுனா தேவி தான் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
செயற்குழுக் கூட்டத்திற்கும், பொதுக் கூட்டத்திற்கும் போடப்பட்டுள்ள பந்தல்களுக்கும் கூட மக்களின் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று அவர் குற்றம்சாற்றியுள்ளார். இந்த ஊழலில் முதல்வர் சிவராஜ்சிங் செளகானின் பங்கு பெருமளவு உள்ளதாகவும் அவர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.
பொதுக்கூட்டத்திற்கு மக்களை அழைத்து வருவதற்காக பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து பேருந்துகள் வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டுள்ளன என்றும் ஜமுனா தேவி கூறியுள்ளார்.
மேலும் " செயற்குழுக் சுட்டத்திற்கு எவ்வளவு பணம் எப்படிச் செலவளிக்கப்பட்டது என்று வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அரசுப் பேருந்துகள், தொலைபேசிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனவா என்று விசாரிக்க வேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.