அணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையேயான மோதல் நீடித்துவரும் நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி 10 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இரவு அமெரிக்கா செல்கிறார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ் மற்றும் பல்வேறு தலைவர்களை சந்திக்கவுள்ள பிரணாப் முகர்ஜி, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளின் முன்னேற்றம் குறித்தும் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து 27ஆம் தேதி ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்திலும் பிரணாப் முகர்ஜி பேசுகிறார்.
அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை 6 மாத காலத்திற்கு ஒத்திப்போடுமாறு இடதுசாரிக் கட்சிகள் அரசை வலியுறுத்தியுள்ள நிலையில் பிரணாப் முகர்ஜியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.