அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுக்கும் என்றும் அதேநேரத்தில் இடதுசாரிகளின் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தத்தை திரும்பப் பெறுவது குறித்து அரசு பரிசீலிக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"சர்வதேச ஒப்பந்தத்திற்குள் நாம் நுழைந்துள்ளோம். அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. அதேநேரத்தில் இடதசாரிகளின் கருத்துக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய கடமையும் அரசிற்கு உள்ளது" என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக அணுஒப்பந்தம் தொடர்பாக டெல்லி காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டார்.
நாட்டின் மின்தேவையை சமாளிக்க அணுஒப்பந்தம் உதவும். இந்த ஒப்பந்தத்தால் பயன்பெறும் ஒவ்வொரு சாதாரண மனிதரிடமும் ஒப்பந்தத்தின் பயன்களைக் கொண்டு செல்வதற்காக நாடு தழுவிய இயக்கம் நடத்த வேண்டும் என்று கருத்தரங்கில் கபில் சிபல் கேட்டுக்கொண்டார்.