நாட்டில் சட்டவிரோத கரு கலைப்புகள் மூலமாக பெண்சிசு கொலைகள் அதிகரித்து வருவதை கண்காணிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
பிரபாகர் தேஷ்பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நாட்டில் சராசரியாக ஒரு கோடி பெண்சிசுக்கள் கரு கலைப்பு மூலமாக கொல்லப்படுகின்றன. இது சமூகத்தின் பால்விகிதத்தை குழைக்கிறது. கரு கலைப்பு தடுப்பு சட்டத்தை மீறி பெண்சிசுக்கள் அவை பிறப்பதற்கு முன்பே கொல்லப்படுகின்றன. இதைத் தடுப்பதற்கு போதுமான அதிகாரிகள் அரசிடம் இல்லை. இருக்கும் அதிகாரிகளுக்கும் போதிய நேரமோ அடிப்படை வசதிகளோ இல்லை. மத்திய அரசும் கருக்கலைப்புத் தடுப்புத் திட்டத்திற்குத் தேவையான நிதியை ஒதுக்குவதில்லை.
எனவே கரு கலைப்பு இயந்திரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை முறையாக செயல்படுத்த தேவையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். கரு கலைப்பு மையங்களை கண்காணிக்க வேண்டும். கருவில் இருக்கும்
குழந்தை பெண்ணாக இருந்தால் அதைக் கலைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்.
பால்விகிதம் குறைந்தால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கும். பெண் கடத்தல் அதிகரிக்கும். குற்றங்களும், தீவிரவாதமும் கூடப் பெருகும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவிச்சந்திரன், டி.கே.ஜெயின் ஆகியோர் இடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.